

சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் சில்லறை விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் செல்வரத்தினம் பொன்னுதுரை வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
சென்னை தி.நகர் பனகல் பார்க் எதிரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் கதவுகள் மூடப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடை இன்று மாலை திறக்கப்படும் என கடையின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
சரவணா ஸ்டோர்ஸ் மட்டுமின்றி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்களான ஜி-ஸ்கொயர் மற்றும் லோட்டஸ் குரூப் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கோவையில் ஒரே நேரத்தில் 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் கிடைத்ததையடுத்து இந்த சோதனைகள் நடைபெறுகிறது’’ என தெரிவித்தனர். வருமான வரித்துறை சோதனை தொடர்பான தகவல்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.