

கோயம்பேடு அருகே சாலையில் நடந்து சென்ற மெக்கானிக் மீது மோதிய மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் தப்பிச் சென்றனர். இந்த மோதலால் மெக்கானிக் பலியானார்.
சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் நியூ காலனியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (40). மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
நெற்குன்றம் மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நடந்து சென்ற போது புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த அடையாளம் தெரியாத 2 பேர் அவர் மீது மோதினர். தூக்கி வீசப்பட்ட நரசிம்மனைக் காப்பாற்றாமல் அவர்கள் தப்பித்துச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் படுகாயத்துடன் கிடந்த நரசிம்மனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய 2 பேரையும் தேடி வருகின்றனர். அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.