மீண்டும் சர்ச்சை கிளம்பியது: சுகாதாரத்துறை செயலாளருக்கு எதிராக அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் பேட்டி

மீண்டும் சர்ச்சை கிளம்பியது: சுகாதாரத்துறை செயலாளருக்கு எதிராக அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் பேட்டி
Updated on
2 min read

ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லத் தேவையில்லை என்ற முடிவை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எப்படி, யார் சொல்லி எடுத்தார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அதிமுக எம்.பி.க்களும், எம்எல்ஏ.க்களும் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சுகாதாரத்துறை செயலருக்கு எதிராக பேட்டி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி முதல்வருக்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்தது.

அமைச்சர்களை கட்டுக்குள் வைக்குமாறு கோரிக்கையும் விடுத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும்விதமாக அதிமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாகப் பேட்டி அளித்து சுகாதாரத்துறைச் செயலர் பற்றியும், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் குறித்தும் பேட்டி அளித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் எம்எல்ஏக்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அருண்மொழித்தேவன் எம்.பி.: தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தேகம் எழுப்பியிருந்தார். அவரின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த சந்தேதகம் சேத்தியாத்தோப்பில் வெளிவந்துவிட்டது.

சேத்தியாத்தோப்பில் டிடிவி தினகரன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை உயர்வாகப் பேசிவிட்டு அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவர் எழுப்பிய சந்தேகத்தின் பின்புலம் அந்தப் பூனைக்குட்டி வெளிவந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.

எம்.எல்.ஏ முருகுமாறன்: டிடிவி தினகரன் பேசும்போது ராதாகிருஷ்ணன் தான் இந்த அரசின் இதயம் என்று சொல்கிறார். இதயத்தில் கோளாறு வந்தால் அதை பைபாஸ் செய்வதில்லையா? ஈசிஜி எடுப்பதில்லையா? ஸ்டண்ட் வைப்பதில்லையா? இதயத்தில் கோளாறாக இருந்தாலும் மாற்றவேண்டியவர்களை மாற்றி, நீக்க வேண்டியவர்களை நீக்கி ஆற்றொழுக்காக ரத்த நாளங்களில் நல்ல ரத்தம் பாய்ந்தால்தான் உடல் சீராக இயங்கும். ஆட்சி என்று வரும்போது இந்த ஆட்சியின் மாட்சியைக் கெடுக்க யார் கருத்தை முன்னெடுத்து வைத்தாலும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.  

திருத்தணி கோ.அரி எம்.பி.: ஜெயலலிதாவின் மருத்துவச் சிகிச்சையை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழகத்திலும், இந்தியாவிலும் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் போதுமான மருத்துவர்களே போதும் என்கிற நிலைப்பாட்டை சுகாதாரத்துறை செயலாளர் எடுத்துள்ளார் என்றால் அவர் யார் சொல்லி எடுத்தார், என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. அந்தக் கேள்வி மக்களிடம் செல்லவேண்டும். இவர் யார் சொல்லி எடுத்தார், வெளிநாட்டிற்கு ஜெயலலிதாவை அழைத்துச் செல்லக்கூடாது என்கிற முடிவை அவர் எப்படி எடுத்தார் என்பதை சுகாதாரத்துறை செயலர் பொதுமக்களிடம் விளக்க வேண்டும் என்கிற ஐயப்பாட்டைத்தான் சாதாரண அதிமுக தொண்டராக இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் எழுப்பியுள்ளார்.

ராமச்சந்திரன் எம்.எல்.ஏ: ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மறைவுக்கான காரணத்தை வேண்டுமானால் வெளிப்படுத்தலாம். ஆனால் உணவுச் செலவாக ரூ.1 கோடியே 17 லட்சம் செலவை யார் செய்தார்கள், யார் தின்று தீர்த்தார்கள் என்பதை ஆணையம் தெரிவிக்காது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னதுபோல் விசாரிக்கப்படவேண்டும். அமைச்சரவை தடுத்ததாக உண்மைக்கு மாறாக கூறியது ஏன் என்கிற விசாரணை தேவை.

ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக இருக்கத் தகுதியற்றவர் என்றோ, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தேவையில்லை என்றோ தாங்கள் கூறவில்லை. ஆனால் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல மறுத்தது யார் என்பதை ராதாகிருஷ்ணன் வெளியே சொல்ல வேண்டும் என்றுதான் தாங்கள் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதிமுக எம்.பி.க்களும், எம்எல்ஏக்களும் தெரிவித்தனர். இதன்மூலம் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in