

தங்களுக்கு 46 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பித்த பள்ளி ஆசிரியர்களுக்கு விருந்து வைத்து கவுரவித்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களின் குருபக்தி, முன்னாள் ஆசிரியர்களை நெகிழச் செய்துள்ளது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் வேட்டையார் பாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை, 1969-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை படித்தார்.
அதன்பிறகு பியூசி, பி.காம் எனப் படித்துவிட்டு 1977-ம் ஆண்டு காவல்துறையில் இளம் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த மனோகரன், கடந்த 2014-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த, விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், இயற்கை வேளாண்மை மீதும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மீதும் ஈடுபாட்டுடன் இருந்தார்.
மனோகரன் தற்போது கரூரில் வசித்துவந்தாலும், தனது சொந்த ஊரான வேட்டையார்பாளையத்தில் 6 ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண் பண்ணை வைத்துள்ளார். இங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பணி ஓய்வுபெற்றபின், தன்னுடன் படித்த மாணவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களை தனது வேளாண் பண்ணைக்கு அழைத்து, கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை அழைத்து கவுரவிக்க வேண்டும் என மனோகரன் மற்றும் அவரது பள்ளித் தோழர்கள் முடிவு செய்தனர். மேலும், தனது பக்கத்து ஊரைச் சேர்ந்த காவல் துறையில் ஐஜி-யாக பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற பாரியையும் கவுரவிக்க முடிவு செய்தனர்.
ஓய்வுபெற்ற ஐஜி பாரிக்கு பாராட்டு விழா, முன்னாள் ஆசிரியர்கள் கவுரவிப்பு, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என முப்பெரும் விழா கடந்த டிச.30-ம் தேதி மனோகரனின் இயற்கை வேளாண் பண்ணையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், கோவை வேளாண் பல்கலைக்கழக ஆர்கானிக் துறைத் தலைவர் சோமசுந்தரம், தூரன் நம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சின்னதாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வி.முருகேசன், எம்.சீனிவாசன், சாமியாத்தாள் உள்ளிட்ட 10 ஆசிரியர்கள் மற்றும் 1971-72, 72-73 ஆகிய கல்வி ஆண்டுகளில் பதினோராம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ஐஜி பாரி மற்றும் ஆசிரியர்கள் 10 பேருக்கு சந்தன மாலை, சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், இயற்கை வேளாண் பண்ணையில் முன்னாள் ஆசிரியர்கள் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சிக்குப் பின் ஆசிரியர்களுக்கு அசைவம், சைவம் என விருந்து வைத்து உபசரித்தார் மனோகரன்.