

யாகம் நடத்தினீர்களோ, பூஜை நடத்தினீர்களோ அதை உங்கள் வீட்டில் நடத்த வேண்டியதுதானே, தலைமைச் செயலகம் உங்கள் தகப்பனார் சொத்தா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் ஈசநத்தம் ஊராட்சியில் ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியபோது யாகம் நடத்தியதாக தாம் கூறியதற்கு ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்து சாமி கும்பிட்டோம் எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக ஸ்டாலின் பேசியதாவது:
''உங்களையெல்லாம் சந்தித்து உங்களுடைய பிரச்சினைகளை, குறைகளை உங்களுடைய எண்ணங்களை, உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் இந்த கிராம சபைக் கூட்டத்தின் மூலமாக ஒரு நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
அதிலும் விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்தித்த இருக்கின்றோம் நாடாளுமன்றத் தேர்தலோடு நிச்சயமாக உறுதியாக சட்டப்பேரவை தேர்தலும் வருவதற்கான வாய்ப்பு இன்றைக்கு உருவாகி இருக்கின்றது.
ஏனென்றால், ஓ.பி.எஸ்.ஸோடு சேர்த்து 11 எம்எல்ஏக்கள் நிலை என்ன ஆகப் போகின்றது என்ற நிலை இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. அதனால்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஓபிஎஸ் யாகம் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் யாகத்தை நடத்தி இருக்கின்றார்.
யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டோம் என்று சொல்கின்றார். நீ சாமி தான் கும்பிட்டியா? இல்லை யாகம் நடத்தினாயா? என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. உன் வீட்டில் நடத்தி இருக்கலாம். கோட்டை உங்கள் தகப்பனார் வீட்டு சொத்தா? அது மக்களுடைய வரிப்பணத்தில் நடைபெறக்கூடிய ஒன்று. மக்கள் இதை பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அதற்குத் தயாராக இருக்கிறார்கள்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.