எழும்பூர் நீதிமன்றத்தில் காவலர்களுடன் வாக்குவாதம்: வழக்கறிஞர்கள் மீது போலீஸார் புகார்

எழும்பூர் நீதிமன்றத்தில் காவலர்களுடன் வாக்குவாதம்:  வழக்கறிஞர்கள் மீது போலீஸார் புகார்
Updated on
1 min read

சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கைதியிடம் பேசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டிய வழக்கறிஞர்கள் மீது போலீஸார் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2-ம் தேதி எழும்பூர் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்த குற்றவாளிகளை  அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் விஜயகுமார், ஆனந்த் ஆகியோர் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கைதிகளை தொட்டு பேசியதை, காவலுக்கு வந்த ஆயுதப்படைக் காவலர்கள் தடுத்துள்ளனர்.

இதற்கு ஆனந்த் மற்றும் விஜயகுமார் ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது போலீஸ் தரப்பில் கைதிகளை தொட்டுப்பேசியதால்தான் ஆட்சேபம் தெரிவித்தோம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது காவலர் ஒருவர் அதை வீடியோ எடுத்தார். இதைப்பார்த்த வழக்கறிஞர்கள் அவரை வீடியோ எடுக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

வீடியோ எடுப்பதை நிறுத்தச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த காணொலி வாட்ஸ் அப்களில் வைரலானது. இந்நிலையில் வழக்கறிஞர்கள் இருவரும் காவலர்களை மிரட்டும் வகையில் பேசியதாக மகேஷ்குமார் என்ற ஆயுதப்படைக் காவலர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவலர் அளித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்யவிருந்த நிலையில் இதுகுறித்து வழக்கறிஞர்கள் தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் முறையிட்டனர். இதையடுத்து இதுகுறித்து ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலைமை குற்றவியல் நடுவர் முன் இனி இதுபோன்ற நடவடிக்கைகள் நடக்கக்கூடாது என்பதற்காக பேச்சுவார்த்தை நடந்தது.

தலைமை குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்ற வளாகத்தில் அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் போலீஸார், வழக்கறிஞர் மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in