

ஞானபீட விருதுக்கு எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயர் பரிந்துரை செய்யப்படும் என புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இலக்கியத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சாகித்ய அகாடமி, ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இதில் சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஏற்கெனவே பெற்றுள்ளார். தற்போது அவரது பெயரை ஞானபீட விருதுக்கு புதுச்சேரி அரசு சிபாரிசு செய்கிறது. இத்தகவலை புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
இன்று (சனிக்கிழமை) காலை கி.ரா.வை அவரது இல்லத்தில் அமைச்சர் சந்தித்தார். கி.ரா.வின் கோபல்ல கிராமம் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுதையொட்டி அமைச்சர் நேரில் வந்து வாழ்த்தினார். ஞானபீட விருதுக்கு எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயர் பரிந்துரை செய்வதுடன் மத்திய கலாச்சார துறை அமைச்சரை நேரில் சந்திதத்து வலியுறுத்துவேன் என்றும் கூறினார் அமைச்சர்.
"தன்னுடைய எழுத்துகளை யார் வேண்டுமானாலும் தெலுங்கில் மொழிபெயர்க்கலாம். அதற்கு பணம் வேண்டாம். 800 ஆண்டுகள் பழமைமிக்க தெலுங்கு தனது வீட்டு மொழி" என கி.ரா. தெரிவித்தார்.