

சென்னை: தமிழகத்தில் 15 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை செயலர் கே.மணிவாசன் பிறப்பித்த உத்தரவு: சென்னை காவலர் நலன் பிரிவு துணை ஆணையர் டி.கண்ணன் தாம்பரம் காவல் ஆணையரக தலைமையிடம் மற்றும் நிர்வாகப்பிரிவு துணை ஆணையராகவும், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஏ.வேல்முருகன் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜி-யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.ஸ்டாலின் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.ரமேஷ் பாபு தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி-யாகவும், அதேபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வி.வி.கீதாஞ்சலி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பி.சுந்தரவடிவேல் சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும், மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி ஆர்.ரமேஷ் கிருஷ்ணன் திருப்பூர் வடக்கு துணை ஆணையராகவும், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி கே.மகேஷ்வரி செங்குன்றம் துணை ஆணையராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கோயம்பேடு துணை ஆணையர் உதயகுமார் திருவண்ணாமலை எஸ்பி-யாகவும், அங்கிருந்த ஏ.சி.கார்த்திகேயன் அடையாறு காவல் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்களைத் தவிர ராமநாதபுரம் கீழக்கரை சப்-டிவிஷன் உதவி எஸ்பி குணால் உத்தம் ஷ்ரோதே பதவி உயர்வு பெற்று கோயம்பேடு துணை ஆணையராகவும், நாமக்கல் சப்-டிவிஷன் உதவி எஸ்பி ஆகாஷ் ஜோஷி பதவி உயர்வு பெற்று திருப்பூர் தெற்கு துணை ஆணையராகவும், மதுரை திருமங்கலம் சப்-டிவிஷன் உதவி எஸ்பி அன்ஷுல் நாகர் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் காங்கேயம் சப்-டிவிஷன் உதவி எஸ்பி அர்பிதா ராஜ்புத் சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்பியாகவும், திருச்சி திருவெறும்பூர் சப்-டிவிஷன் உதவி எஸ்பி பனாவத் அரவிந்த் திருச்சி வடக்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.