

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சித் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம்கோடியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி குடிநீர் விநியோகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி, பாதாளச் சாக்கடைக்கு ரூ.60 ஆயிரம் கோடி, போக்குவரத்துக்கு ரூ.30,350 கோடி ஒதுக்க மதிப்பிடப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.3 ஆயிரம் கோடி, பசுமை, பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நீர்நிலைகள் மேம்பாட்டுக்கு தலா ரூ.2 ஆயிரம் கோடி, சமூக உட்கட்டமைப்புக்கு ரூ.1,500 கோடி, பாதுகாப்புக்கு ரூ.500 கோடி, டிஜிட்டல் நிர்வாகத்துக்கு ரூ.300 கோடி, சுகாதாரத்துக்கு ரூ.300 கோடி, திட்ட ஆவணங்கள் தயாரிப்புக்கு ரூ.50 கோடி என மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேர குடிநீர்: இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து மாநகராட்சிகளிலும் படிப்படியாக 24 மணி நேரமும், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தினமும் குறைந்தபட்சம் 3 மணி நேர குடிநீர் விநியோகம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் பாதாளச் சாக்கடை வசதிகள் விரிவு படுத்தப்படும். மேலும், 3.5 மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட தெருக்களில் தார் சாலைகளுக்குப் பதிலாக இன்டர்லாக்கிங் பேவர் பிளாக்குகள் மட்டுமே பதிக்க வேண்டும்.
நகர்ப்புறங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி மரக்கன்றுகள் நடவும், பூங்காக்கள், மியாவாக்கி காடுகள்,பசுமை வழித்தடங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கோவை நொய்யல் உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளைப் புனரமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்துச் சேகரித்து, மறுசுழற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், அங்கன்வாடிகள், டிஜிட்டல் நூலகங்கள் உள்ளிட்ட சமூகக்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். தெருநாய்களைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப விலங்குகள் கருத்தடை மையங்கள், ரேபிஸ் தடுப்பூசி மற்றும் காப்பக வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கண்காணிப்பு கேமராக்கள், ஸ்மார்ட் தெரு விளக்குகள், அவசர அழைப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். நகராட்சி சொத்துகளுக்குத் தனித்துவ டிஜிட்டல் அடையாள எண் (UDPI) வழங்குவதுடன், திட்டத்தில் உருவாக்கப்படும் கட்டமைப்புச் சொத்துகள் புவியிடக் குறியீடு (Geo-tagging) செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும்.
மத்திய, மாநில அரசுத் திட்டங்கள், நிதிக்குழு மானியங்கள், நகராட்சி நிதி, உலக வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், தனியார் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் இந்த திட்டங்களுக்கான நிதிபெறப்படும். உள்ளாட்சிகளுக்கான நிதி பகிர்வில் மக்கள் தொகைக்கு 90 சதவீதமும், பரப்பளவுக்கு 10 சதவீதமும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இதற்கான மாதிரி ஒதுக்கீடாக ரூ.6,000 கோடியை கணக்கிட்டுள்ள அரசு, அதில் சென்னை மாநகராட்சிக்கு 19 சதவீதம், மற்ற மாநகராட்சிகளுக்கு 33 சதவீதம், நகராட்சிகளுக்கு 23 சதவீதம் மற்றும் பேரூராட்சிகளுக்கு 25 சதவீதம் என்ற விகிதத்தில் நிதி பகிரப்படும்.
அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களுக்கு பொதுவாக 90:10 என்ற விகிதத்திலும், வருவாய் ஈட்டும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற திட்டங்களுக்கு 60:40 என்ற விகிதத்திலும் அரசு மானியம் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பங்களிப்பு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.