

போதிய நிதி ஒதுக்காததால் சமூக நலத்துறையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட திருமண உதவி தொகை விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்துள்ளன.
ஏழை பெண்களின் திருமணத் துக்காக சமூக நலத்துறையின் மூலம் 5 வகையான திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கும் ஏழை பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், கல்வி தகுதிக்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வருமான சான்று, கல்வி தகுதி சான்று, இருப்பிட சான்று, வயது வரம்பு சான்று உள்ளிட்டவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆவணங்களை இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்.
திருமண உதவி தொகைக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.724 கோடி ஒதுக்கி வருகிறது. ஓர் ஆண்டில், சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் விண்ணப்பிக்கின்றனர்.
ஆனால், அரசு ஒதுக்கும் நிதியைக் கொண்டு அனைத்து பயனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க முடியவில்லை. இதனால் ஆண்டுதோறும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தேக்கம் அடைந்து சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேங்கி யுள்ளன.
இதனால், திருமணத்துக்கு விண்ணப்பித்து குழந்தை பிறந்தும் உதவி தொகையை பெற முடியாமல் ஏழை பெண்கள் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருமண உதவி தொகைக்காக அரசு அளிக்கும் நிதி போதுமானதாக இல்லை. நிதி பற்றாக்குறையால் அனைத்து ஆவணங்களும் சரியாக இணைக் கப்பட்டிருந்தால் தான் உதவி தொகை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
சிறு தவறு இருந்தால் கூட நிராகரிக்கும்படி கூறியுள்ளோம். இருப்பினும், தகுதியான விண்ணப் பங்கள் அனைத்துக்கும் உதவி தொகைகளை அளித்து வருகி றோம். ஆண்டுதோறும் நிறுத்தி வைக்கப்பட்டு வரும் 40 ஆயிரம் விண்ணப்பங்களில் தகுதியான வற்றை தேர்வு செய்து சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தொகைகளை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினர்.
இ- சேவை மையங்களால் பாதிப்பு
இ-சேவை மையங்களில் ஆவணங்களை பதிவேற்றம் செய்யும்போது அங்கு பணியில் உள்ள ஊழியர்கள் அனைத்து ஆவணங்களையும் கேட்டு பதிவேற்றம் செய்வதில்லை. இதனால், பலர் வருமான சான்று உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யாமல் விண்ணப்பித்து விடுகின்றனர்.
இவ்வாறு, தமிழகம் முழு வதும் ஆவணங்களை சரியாக பதிவேற்றம் செய்யாத 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உதவி தொகையை பெற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.