

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் கோவை, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட பெரும்பான்மையான இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. 5 பேரூராட்சி வார்டுகளை மட்டும் பாஜக பிடித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்பு களில் காலியாக இருந்த கோவை, தூத்துக்குடி, நெல்லை மேயர்கள், 7 நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு செப்டம்பர் 18-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை.
நெல்லை மேயர் மற்றும் புதுக்கோட்டை, குன்னூர், கொடைக்கானல், சங்கரன் கோவில் ஆகிய 4 நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 1,500 பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எஞ்சியிருந்த 530 இடங்களுக்கு கடந்த 18-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 1,486 பேர் போட்டியிட்டனர்.
பதிவான வாக்குகளை எண்ணும் பணி 307 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.
இந்த தேர்தலில் பெரும் பாலான இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. கோவை, தூத்துக்குடி மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி மேயருக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி 1,16,593 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு 31,708 வாக்குகள் கிடைத்தன. பிற கட்சிகள் 1,305 வாக்குகள் பெற்றுள்ளன. கோவை மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.ராஜ்குமார் 2,96,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள் ளார். அதேபோல 4 நகராட்சித் தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.
விருத்தாசலத்தில் அருள் அழகன், கடலூரில் ஆர்.குமரன், ராமநாதபுரத்தில் சந்தானலட்சுமி, அரக்கோணத்தில் கண்ணதாசன் ஆகியோர் நகராட்சித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னை -1 (35-வது வார்டு), ஈரோடு -1 (60-வது வார்டு), மதுரை -1 (4-வது வார்டு), தூத்துக்குடி -1 (37-வது வார்டு), திருச்சி -2 (15 மற்றும் 37வது வார்டு), திருப்பூர் -2 (22 மற்றும் 45-வது வார்டு) ஆகிய எட்டு மாநகராட்சி வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
இதுதவிர, 23 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் 20 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் நடந்த 6 பேரூராட்சித் தலைவர் பதவி களையும் அதிமுக கைப்பற்றி யுள்ளது. 37 பேரூராட்சி வார்டு களில் 27 இடங்களில் அதிமுகவும், 5 இடங்களில் பாஜகவும், 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 2 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். 32 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் 28 இடங்களை அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்தையும், 3 இடங்களை சுயேச்சைகளும் பிடித்துள்ளன.