சென்னையில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக மீது வீண்பழி சுமத்துகிறார்கள்:  ஸ்டாலின்

சென்னையில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக மீது வீண்பழி சுமத்துகிறார்கள்:  ஸ்டாலின்
Updated on
2 min read

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின்போது செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக மீது வீண்பழி சுமத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

மதிமுக நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் டீக்கடை ஒன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய நபரை தனது செல்போனில் படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய நபர் திமுகவைச் சேர்ந்தவர் என வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி:

 முதல்வரின் கஜா நிவாரணப் பணிகள் குறித்து நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால், எல்லா இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு டீ கடைகளில் டீ குடித்திருக்கிறாரே?

அதெல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கு நாடகம் நடத்திக்கொண்டு இருக்கிறார்களே தவிர, அடிப்படையான நிவாரணப் பணிகளில் இந்த அரசு முழுமையாக இன்னும் ஈடுபடவில்லை என்பது தான் எங்களுடைய ஒட்டுமொத்தமான குற்றச்சாட்டு.

உலக மாற்றுத்திறனாளி தினமான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்களே?

மாற்றுத்திறனாளிகள் போராடுவது புதிது அல்ல. அவர்கள் இந்த ஆட்சியில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம் இந்த ஆட்சி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மாற்றுதிறனாளிகள் மட்டுமல்ல, ஜாக்டோ ஜியோ ஒரு பக்கம், விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் தாண்டி இன்றைக்கு கஜா புயலினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்த நிலையிலே தெருவில் நின்று சாலை மறியல் செய்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் இந்த ஆட்சி கண்டுகொள்ளவில்லை. அவர்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே கமிஷன்  - கரப்ஷன் – கலெக்‌ஷன் என்ற அந்த நிலையில் தான் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

கருணாநிதி சிலை திறப்பு விழா பணிகள் எந்தளவிற்கு இருக்கிறது?

சிலை திறப்பு விழா வருகிற 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. சிலை திறப்பு நிகழ்ச்சி என்பது என்னுடைய தலைமையில் கழத்தினுடைய பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில்,  சோனியாகாந்தி திறந்து வைக்க இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலய வளாகத்தில் சிலை திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. சிலை திறப்பு விழா முடிந்ததற்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக பொதுக்கூட்டம் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவிருக்கிறது. அற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அங்கீகரிக்கப்படாத சின்னம் இல்லாத கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென திமுக தரப்பில் மறைமுகமாக சொல்லப்பட்டது,  மறுபடியும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதே?

உங்களைப் போன்ற ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடிய சலசலப்பு தானே தவிர, எந்த சலசலப்பும் எங்களுடைய அணியில் இருக்கக்கூடியவர்களுக்கு எதுவும் இல்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரியார் சிலைகளுக்கு உயிர் இருக்கிறதா என்று எச்.ராஜா விமர்சித்திருக்கிறாரே?

எச்.ராஜாவினுடைய தரங்கெட்ட பேச்சுகளுக்கெல்லாம் நான் தரம் தாழ்ந்து பதில் சொல்லத் தயாராக இல்லை.

சென்னை ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருக்கிறாரே?

செய்தியாளர் தாக்கப்பட்டிருப்பது குறித்து நானும் கேள்விப்பட்டேன். ஆனால், வேண்டுமென்றே குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் திட்டமிட்டு திமுக மீது வீண்பழியை சுமத்தி திமுகதான் காரணம் என்று ஒரு தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. வேறு யாரோ, அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து களங்கத்தை ஏற்படுத்தி வேண்டுமென்றே திமுக மீது அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற கட்சிகள் மீது அபாண்டமான பழியை சுமத்துவதற்காக செய்யப்பட்டிருக்கக்கூடிய நாடகம் என்பதை உறுதியாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்கு சம்பந்தபட்டவர்களை கைது செய்யப்பட்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். எந்த வழக்குப் பதிவும் திமுககாரர் மீது போடப்படவில்லை என்பது தான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in