காதல் திருமணம் செய்துகொண்ட காடுவெட்டி குருவின் மகள் போலீஸில் தஞ்சம்

காதல் திருமணம் செய்துகொண்ட காடுவெட்டி குருவின் மகள் போலீஸில் தஞ்சம்
Updated on
1 min read

வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் காதல் திருமணம் செய்துகொண்டு, பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் காடுவெட்டியைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்க முன்னாள் தலைவருமான காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை(20). சென்னையில் ஒரு கல்லூரியில் பிஏ படித்து வரும் இவர், கடலூர் மாவட்டம் பழஞ்சநல்லூரைச் சேர்ந்த காடுவெட்டி குருவின் தங்கை சந்திரகலாவின் மகனான ஐஏஎஸ் படித்து வரும் மனோஜ்கிரண்(27) என்பவரை காதலித்து நேற்று காலை கும்பகோணத்தில் உள்ள காடுவெட்டி குருவின் மற்றொரு தங்கை செல்வியின் வீட்டில் திருமணம் செய்துகொண்டார்.

பின்னர், காடுவெட்டிக்கு புதுமணத் தம்பதி புறப்பட்டபோது, ஊருக்குள் இவர்களை விடமாட்டார்கள் என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து மணமக்கள், இவர்களுக்கு திருமணம் செய்து வைத்த குருவின் அக்கா மீனாட்சி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதுகுறித்து மீனாட்சி கூறியபோது, "யாரைக் கேட்டு திருமணம் செய்து வைத்தீர்கள் எனக் கேட்டு காடுவெட்டியில் உள்ள சிலர் மிரட்டுகின்றனர். ஊருக்குள் நாங்கள் சென்றால் விரட்டியடிப்போம் எனக் கூறுகின்றனர். குருவின் வீட்டையும் சொத்துக்களையும் அபகரித்துள்ளனர். குருவின் குடும்பத்துக்கு பாமகவோ, வன்னியர் சங்கமோ இதுவரை எந்த பாதுகாப்பும் தரவில்லை. எனவே, எங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in