

நாகை துறைமுகத்தில் அபாயத்தைக் குறிக்கும் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது. 'கஜா' புயல் இன்று இரவு நாகை அருகே கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இந்நிலையில், நாகை துறைமுகத்தில் அபாயத்தைக் குறிக்கும் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகம் இருக்கும் பகுதி வழியாக புயல் கடக்க வாய்ப்பிருந்தால் 10 ஆம் எண் கூண்டு ஏற்றப்படும். மேலும், 10 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், சம்மந்தப்பட்ட துறைமுகம் வானிலை எச்சரிக்கை மையத்தோடு தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது என்று அர்த்தம்.
ஏற்கெனவே நாகை துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில், ஒரே நேரத்தில் நேரடியாக 10 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், "பொதுமக்களின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மையங்கள் உள்ளன. அவற்றைக் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, குடிநீர், உணவு, சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில், குறிப்பாக குறைந்த பாதுகாப்பு கொண்ட ஓலைக்குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என ஆட்சியர் தெரிவித்தார்.