

மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ சமூக ஊடகங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ ஒரு பெண்ணுடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது போன்று இருந்தது.
‘என் மகள் சிபாரிசுக்கு வந்தபோது அவளை கர்ப்பமாக்கி விட்டீர்களே’ என ஒரு பெண் கூறுகிறார். அதற்கு எதிர்முனையில் பேசியவர், ‘நேரில் வாங்க. பேசிக்கலாம்’ என்கிறார். வெவ்வேறு நாட்களில் 2 முறை அவர்கள் பேசியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை பெயர் டி.ஜெயக்குமார் என குறிப்பிட்டு, கடந்த ஆகஸ்டில் பெறப்பட்ட பிறப்பு சான்றிதழும் வெளியானது.
இந்நிலையில், பாதிக்கப் பட்டதாக கூறப்படும் பெண் சார்பில், தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்புகாரில், அமைச்சர் டி.ஜெயக்குமார் தன்னிடம் சிபாரிசு கேட்டு சென்ற ஒரு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டார். அதன்பின் கர்ப்பத்தை கலைக்கு மாறு அவர்களை மிரட்டினார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது. டி.ஜெயக்குமார் பெயரில் குழந்தைக்கான பிறப்புச் சான்றி தழும் வழங்கப்பட்டுள்ளது. அதை புகாருடன் இணைத்துள் ளேன்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அவர்கள் ஏற்கவில்லை. எனவே, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையத்திடமும் அந்தப் பெண் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்பாபு புகார் அளித்துள்ளார்.
என்னுடைய குரல் அல்ல...
இந்நிலையில், தன் மீதான புகார்களை மறுத்துள்ள அமைச்சர் டி.ஜெயக்குமார், அந்த ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, ‘‘சசிகலா, தினகரன் குடும்பத்தை கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக எதிர்ப்பதால் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.
ஓராண்டுக்கு முன்பு நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் நான் இருந்ததாக வாட்ஸ்-அப்பில் உலவவிட்டனர். என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள், வாய்ஸ் மார்பிங் செய்த ஆடியோவை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளனர்.
எதையும் போலியாக தயாரிப்ப தில் அவர்கள் கெட்டிக்காரர்கள். இதை சட்டத்தின் மூலம் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். டி.ஜெயக்குமார் என்றால் உலகத் தில் நான் ஒருவன் மட்டுமா உள்ளேன். என் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட திட்டமிட்ட சதி இது’’ என்றார்.