

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை மற்றும் சாலைக்கு கருணாநிதி பெயர் வைக்கப்படும் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘தமிழகத்தின் முதுபெரும் தலைவர், தமிழின தலைவர், உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு எல்லாம் தலைவராக விளங்கி வந்த கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே அறிவித்தது போல் இன்று அரசு விடுமுறை என்பது முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக நான் கூறியிருந்தேன். இப்போது அமைச்சரவையில் முடிவு செய்து 7-ம் தேதியில் இருந்து 13-ம் தேதி வரை 7 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் துக்கம் அனுசரிக்கப்படும்.
7 நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. கருணாநிதி தமிழ்மொழி வளர்ச்சிக்கு தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். எனவே அவரை போற்றும் வகையிலும், மதிக்கின்ற வகையிலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதியின் பெயரில் இருக்கை அமைக்கப்படும். இது உலகத்தில் இருந்து வருகின்ற தமிழர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்கி கொடுக்கும்.
அதுமட்டுமின்றி காரைக்கால் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் மேற்படிப்பு கல்லூரி கருணாநிதியின் பெயரால் ஆரம்பிக்கப்படும். கோட்டுச்சேரி-திருநள்ளார் பைபாஸ் சாலைக்கு கருணாநிதி பெயர் வைக்கப்படும். புதுச்சேரியில் ஒரு தெருக்கு கருணாநிதி பெயர் வைக்க முடிவு செய்துள்ளோம்.
கருணாநிதிக்கு மாநில அரசின் சார்பில் முழு வெண்கல உருவச்சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு குழு அமைத்து, அந்த குழுவின் மூலம் இடம் தேர்வு செய்து சிலை அமைக்கப்படும். கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நானும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சென்னை சென்று கருணாநிதி இறுதி சடங்கில் கலந்துகொள்ள உள்ளோம்.
கருணாநிதியின் இழப்பு தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்துக்கு பேரிழப்பு. புதுச்சேரி அரசியலில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். புதுச்சேரி மாநிலத்துக்கு பல வளர்ச்சி திட்டங்களை கொடுக்க நமக்கு உதவி செய்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு இருந்த போது, அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது நாங்கள் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தவர்.
அப்படிப்பட்ட தலைவர் நம்மத்தியில் இப்போது இல்லை. அவருடைய மறைவு நமக்கெல்லாம் மிகப்பெரிய பேரிழப்பு. கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். கருணாநிதி அடக்கம் செய்ய கொடுக்கப்படும் இடத்துக்கு தமிழக அரசு அரசியல் செய்யக்கூடாது. மிகப்பெரிய தமிழின தலைவர், உலக தலைவர்களால் பாராட்டப்பட்டவர்.
தமிழகத்தின் அனைத்து மக்களின் விருப்பமே அண்ணா சமாதி அருகில் கருணாநிதிக்கு நினைவிடம் இருக்க வேண்டும் என்பது தான். அதில் பெருந்தன்மையோடு தமிழக அரசு கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய அவர்ளே அனுமதி அளித்திருக்க வேண்டும்” என்றார்.