வானிலை முன்னறிவிப்பு: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனியில் கனமழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனியில் கனமழை வாய்ப்பு

Published on

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (நவ.7), நாளை மறுதினமும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 9 முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 12-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தலா 8 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தலா 7 செமீ, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருவாரூர் மாவட்டம் கொடவாசல், பெரம்பலூர் மாட்டம் வேப்பந்தட்டை, விழுப்புரம் மாவட்டம் வல்லம், மரக்காணம், வானூரில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in