

கோவை மண்ணின் மைந்தரான சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்றதும் முதன்முறையாக கோவை வந்தார். அவருக்கு ‘கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ அமைப்பின் சார்பில், நடந்த பாராட்டு விழா அனைவரின் கவனத்தையும் கவரும் நிகழ்வாக மாறியது.
அதிமுக, திமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றதுதான் அதற்கு காரணம். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அணிவகுத்து வந்திருந்தனர்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வரவேற்று அமர வைத்துக் கொண்டு இருந்தார். அதன்பின் அரங்கிற்கு வந்த நயினார் நாகேந்திரன், எஸ்பி வேலுமணியில் தொடங்கி, அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களையும் அருகில் சென்று வரவேற்று வணக்கம் வைத்தார்.
இந்த நிலையில், சிபிஆரை விமான நிலையத்தில் வரவேற்று விட்டு, சற்று தாமதமாக, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அரங்கில் ‘என்ட்ரி’ கொடுக்க, அனைவரின் கவனமும் அவர் மேல் திரும்பியது. முன்வரிசையில் அமர்ந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எழுந்து நின்று வணக்கம் வைக்க, அவருக்கு பவ்வியமாய் வணக்கம் வைத்து ‘ஸ்கோர்’ அடிக்கத் தொடங்கினார் அண்ணாமலை.
வரிசையாய் வணக்கம் வைத்தவாறே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்த பக்கம் அண்ணாமலை செல்ல, சூலூர் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அம்மன் அர்ஜுனன் ஆகியோர் அண்ணாமலை அருகில் வந்து கை கொடுத்து வரவேற்றனர். அப்போது, ‘அண்ணாமலைக்கும் ஒரு கை கொடுப்போம்’ என அம்மன் அர்ஜுனன் சொல்ல அங்கு சிரிப்பலை எழுந்தது.
இதைத்தொடர்ந்து ஹெச். ராஜா, கேசவவிநாயகம் ஆகியோருக்கும் வணக்கம் வைத்து, நலம் விசாரித்தார் அண்ணாமலை. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் அண்ணாமலைக்கு எழுந்து நின்று வணக்கம் வைக்க பதில் மரியாதை செய்தார். பாஜகவைச் சேர்ந்த சேலஞ்சர் துரை ‘மாப்பிள்ளை வணக்கம்’ என சொல்ல ‘மாமா வணக்கம்’ என்று அண்ணாமலை சொல்ல கலகலப்பு கூடியது.
அதேபோல், கோவையில் முன்னணி தொழிலதிபர்களிடமும் நெருங்கிச் சென்று வணக்கம் வைத்து அவர்களின் கவனத்தையும் கவர்ந்தார். அப்போது கோவை கே.ஜி.மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம் ‘ நீங்க நல்லவருங்க’ என்று அண்ணாமலையை கையைப் பிடித்துச் சொல்ல அங்கு மீண்டும் கலகலப்பு ஏற்பட்டது.
விழாவில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகளும், அதிமுக எம்.எல் ஏக்களும், கூடிக் குலாவி நலம் விசாரித்த காட்சிகள், ‘கூட்டணி குதூகலத்தை’ வெளிப்படுத்துவதாக அமைந்தது. இவற்றோடு, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனும், ஒரே இருக்கையைப் பகிர்ந்து கொண்டதும் பேசுபொருளானது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில், திமுக பிரமுகர்களை கண்டால் ‘தெறித்து’ ஓடும் பழக்கம் அதிமுகவினரிடம் இருந்த நிலையில், இந்த காட்சி கவனிக்கத்தக்கதாக மாறியது. இதுகுறித்து பொங்கலூர் பழனிசாமி கூறுகையில், ‘‘குடியரசு துணைத்தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றதற்காக நடந்த பாராட்டு விழாவில், ஒரு இருக்கையில் இருவர் அமர வேண்டிய நிலை இருந்தது.
எனக்கு இருக்கை போடும்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் அமரும் வகையில் இடம் ஒதுக்குமாறு கூறி இருந்தேன். அவர்கள் பொள்ளாச்சி ஜெயராமனுடன் அமரும் வகையில் எனக்கு இடம் ஒதுக்கி இருந்ததால் அவருடன் உட்கார்ந்தேன். பொள்ளாச்சி ஜெயராமனுடன் நட்பாக பல விஷயங்களைப் பேசிக் கொண்டு இருந்தேன். அதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.
பொது நிகழ்ச்சிகளில் எதிர்கட்சி பிரமுகர்களுடன் பேசக்கூடாது, அமரக்கூடாது என்ற கட்டுப்பாட்டை கருணாநிதியோ, ஸ்டாலினோ எப்போதும் விதித்ததில்லை. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அருகில் அமர்ந்தால் கூட அவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள்’’ என்றார்.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் பேசியபோது, ‘கோவையில் நடந்த குடியரசு துணைத்தலைவர் நிகழ்ச்சியில், ‘புரோட்டாகால்’படி எனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அருகில் இருந்தவர் எனக்கு பரிச்சையமானவர் என்பதால், அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்’ என்று சொல்லி முடித்துக் கொண்டார்.