சட்டப்பேரவை தேர்தலில் மதுரையில் விசிக போட்டி? - திருமாவளவன் சூசக தகவல்

சட்டப்பேரவை தேர்தலில் மதுரையில் விசிக போட்டி? - திருமாவளவன் சூசக தகவல்
Updated on
1 min read

மதுரை: மதுரையிலுள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் விசிக போட்டியிடுவது பற்றி தொகுதி பங்கீட்டின்போது முடிவெடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க சென்னையில் இருந்து விமான மூலம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தமிழகத்திலும் மேற்கொள்ளப்படுவதற்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் கூடி விவாதிக்கவேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி சிறப்பு வாக்காளர்கள் பட்டியல் திருத்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இதை நடைமுறைபடுத்தகூடாது.

பிஹாரில் வாக்கு திருட்டு நடந்ததை போன்று தமிழகத்திலும் நடக்கும். இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரளவேண்டும். பல்கலைக்கழக சிறப்பு மசோதாவை திரும்ப பெறவேண்டும் என விசிக சார்பிலும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இது குறித்து உயர் கல்விதுறை அமைச்சர் கோவி செழியன் மறுசீராய்வு செய்யப்படும் என அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

பாஜகவில் பொறுப்பில் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் அரசியல் செய்ய களமின்றி போனதால் விரக்தியில் உள்ளார். எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல விசிகவுக்கு எதிராக அவதூறாக பேசுகிறார். எப்படி பிரச்சாரம் செய்தாலும் பாஜக தலைமைக்கு இனிமேல் அவர் மீது நம்பிக்கை இல்லை.

ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றக்கோரி விசிக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதற்கான சட்டம் இயற்றப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்ததை வரவேற்கிறோம். நீதிபதி பாஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் இன்றியும் சட்டம் கொண்டு வரலாம். வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்.

2026-ல் சட்டப்பேரவை தேர்தலில் மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதியில் ஏதாவது ஒன்றில் விசிக போட்டியிடுவது பற்றி தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீட்டின்போது முடிவெடுக்கப்படும்” என கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in