

விருதுநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் உள்ள பல்வேறு கடைகள், தனியார் நிறுவனங்கள், மரக்கடைகளில் தீயணைப்புத் துறையினர் நோட்டுப் போட்டு பணம் வசூல் செய்வதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, புகார்கள் தொடர்பாக விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் ஹரிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன், வினோத் ஆகியோரைப் பிடித்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில், இவர்கள் ரூ.4.94 லட்சம் வசூல் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, மூவர் மீதும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், புகாரில் சிக்கிய ஹரிச்சந்திரன் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தீயணைப்பு நிலையத்துக்கும், நவநீதகிருஷ்ணன் மதுரை மாவட்டம் மேலூர் தீயணைப்பு நிலையத்துக்கும், வினோத் தேனி மாவட்டம் மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.