தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை

தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையக்கூடும். நாளை, மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் செப்.27-ம் தேதி கரையை கடக்கக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை முதல் செப்.30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் (செப்.27) தேதி வரை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 26-ம் தேதி தென்காசியிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 28-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடில் 5 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், கீழ் கோதையார், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் தலா 2 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை, சங்கராபுரம், மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு உள்ளிட்ட இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in