ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அலுவலக ஊழியர் லஞ்சம் கேட்டதாக அரசு மருத்துவர் புகாரால் பரபரப்பு
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் ஜெய்சன் பிலிப், கடந்த மார்ச் 14-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விதிகளின்படி, மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களின் சேவை பதிவேடு உடனடியாக புதிய பணியிடத்துக்கு அனுப்பப்பட வேண்டும். இதனை பல முறை கேட்டும் பதிவேட்டை அனுப்பவில்லை என்றும், லஞ்சம் கேட்பதாகவும் மருத்துவர் ஜெய்சன் பிலிப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவர் ஜெய்சன் பிலிப் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “எனது சேவை பதிவேடு உடனடியாக அனுப்பப்பட வேண்டும். நான் தினமும் கேட்டு வருகிறேன். ஆனால், ரூ.1,000, ரூ.2,000 லஞ்சம் கேட்கின்றனர். முதல்வரிடம் புகார் அளித்தாலும், லஞ்சம் இல்லாமல் உங்களுடைய சேவை பதிவேட்டை அனுப்ப முடியாது என கூறுகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர், செயலர் எனக்கு உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அரசு மருத்துவரின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு சென்றது, மருத்துவர் ஜெய்சன் பிலிப்பை தொடர்பு கொண்ட அமைச்சர், உங்களுடைய பிரச்சினை விதிகளின்படி உடனடியாக தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த தகவலையும் ஜெய்சன் பிலிப் தனது எக்ஸ் வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
