கடலூரை சேர்ந்த நபர் ஜிப்மரில் மூளைச்சாவு - சீறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் தானம்

கடலூரை சேர்ந்த நபர் ஜிப்மரில் மூளைச்சாவு - சீறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் தானம்

Published on

புதுச்சேரி: கடலூரை சேர்ந்த ஒருவர் தலையில் காயமடைந்து ஜிப்மரில் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரின் சீறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் தானமாக பெறப்பட்டு வேறு நபர்களுக்கு பொருத்தப்பட்டன.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், குருஞ்சிப்பாடி தாலுகா, வடகுத்து கிராமத்தைச் சேர்ந்தர் ரமேஷ் (58). கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தலையில் பலத்த காயம் அடைந்தார். இவர் கடந்த 23 ஆம் தேதியன்று புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உறுப்புகள் வேறுநபர்களுக்கு தானமாக தரப்பட்டுள்ளது.

இதுபற்றி ஜிப்மர் தரப்பில் இன்று கூறுகையில், “மனிதாபிமானத்தின் ஒரு குறிப்பிடத்தக்க செயலாக, ரமேஷ் குடும்பத்தினர் தானாக முன்வந்து உறுப்பு தானத்திற்கு சம்மதித்தனர்.கடந்த 27 ஆம் தேதி அவரது இரு சிறுநீரகங்கள், கல்லீரல், இரண்டு கருவிழிகள் தானமாக பெறப்பட்டன.

இரண்டு சிறுநீரகங்களும், கருவிழிகளும் ஜிப்மரில் உரிய நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது, புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் (MGMC) கல்லீரல் வேறு நபருக்கு பொருத்தப்பட்டது, இது பல நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கையையும் பார்வையையும் அளித்தது." என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in