ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு; அரசு ஊழியர் சங்கங்களுடன் 4 நாட்கள் கருத்துகேட்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசில் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களிடம் 4 நாட்கள் கருத்துகளைக் கேட்க உள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேநேரம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு ஜன1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2003- 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி மாநில அரசுப் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த ஜன. 24-ம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் மற்றும் நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தயாள் ஆகியோர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேச இக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, ஆக.18, ஆக, 25, செப்.1 மற்றும் செப்.8 ஆகிய 4 நாட்களில் காலை 11 மணிக்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 பிரதிநிதிகள் குறித்த தகவலை தெரிவிக்கும்படி, சங்கங்களின் தலைவர், செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in