படங்கள்: ஜெ. மனோகரன்
படங்கள்: ஜெ. மனோகரன்

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கியோரின் சிலைகளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

Published on

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் அமைவதற்கு காரணமாக இருந்த தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாகவும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நா. மகாலிங்கம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர் ஆகியோரின் நினைவாக அவர்களின் திருவுருவச் சிலைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் 4.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் 1.25 ஏக்கர் பரப்பளவில் 4.25 கோடி மதிப்பில் காமராஜர் உள்ளிட்ட நால்வரின் திருவுருவச் சிலைகள், பயிற்சி அரங்கம், கண்காட்சி அரங்கத்துடன் அமைக்கப்பட்டது.

பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அங்கிருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், பொள்ளாச்சி நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் காமராஜ் உள்ளிட்ட 4 பேரின் திருவருவ சிலைகளை திறந்து வைத்தும், அவர்களது படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பின்னர், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.கே.பழனிச்சாமி கவுண்டர், நா.மகாலிங்கம் அவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவு அரங்கத்தை திறந்து வைத்தார். மேலும், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல்வரின் வருகையையொட்டி, பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், சாலை இரு புறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு முதல்வரை வரவேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in