தவெக மதுரை மாநாடு: காவல் துறை கேள்விகளுக்கு ஆனந்த் நேரில் விளக்கம்

தவெக மதுரை மாநாடு: காவல் துறை கேள்விகளுக்கு ஆனந்த் நேரில் விளக்கம்

Published on

மதுரை: மதுரையில் நடக்க இருக்கும் தவெக மாநாடு குறித்த காவல் துறையின் பல்வேறு கேள்விகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திருமங்கலம் கூடுதல் எஸ்பியிடம் விளக்கம் அளித்தார்.

மதுரை அருகே பாரபத்தி என்ற இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆக.25-ல் நடக்கும் என, கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். இதற்காக சுமார் 500 ஏக்கர் இடம் தேர்வு செய்து ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. மாநாட்டுக்கான அனுமதி, பாதுகாப்பு கேட்டு மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கடிதம் கொடுத்த நிலையில், ஆகஸ்டு 27-ம் தேதிக்கு மேல் விநாயகர் சதுர்த்தி வருவதால் வேறு தேதியில் மாநாடு நடத்திக்கொள்ள காவல் துறை அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து ஆக.21-ல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மாநாடு தொடர்பாக திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கான விளக்கத்தை ஏற்கெனவே தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அளித்துள்ளார். கட்சி வாகனங்கள் செல்லும் வழிப் பாதைகள், மாநாட்டுக்கு வரக்கூடிய தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள், சிசிடிவி கேமராக்கள் அமைவிடங்கள், மருத்துவ வசதி ஏற்பாடுகள் குறித்த காவல் துறையின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பொதுச் செயலாளர் ஆனந்த், கூடுதல் எஸ்பி அன்சுல் நாகரிடம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றும் சமர்ப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்சி ஆனந்த் கூறுகையில், ”மாநாடு குறித்த காவல் துறையினர் கேள்விகளுக்கு உரிய தகவல்கள் அளித்துள்ளோம். திட்டமிட்டபடி ஆக.21-ல் தவெக மாநாடு நடக்கும்” என கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in