சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவர் தேவையில்லை: கொலையான ஜெயராஜ் மனைவி தரப்பு வாதம்

சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவர் தேவையில்லை: கொலையான ஜெயராஜ் மனைவி தரப்பு வாதம்
Updated on
1 min read

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் அப்ரூவர் கோரிக்கையை ஏற்கக்கூடாது என கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் வாதிடப்பட்டது.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு உட்பட 9 பேரை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற த்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாற அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி முத்துகுமரன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது ஸ்ரீதரை போலீஸார் ஆஜர்படுத்தினர். மற்ற 8 எதிரிகளும் காணொலி மூலமாக ஆஜராகினர். ஜெயராஜ் மகள்கள் பெர்சி, பீலா ஆகியோரும் ஆஜராகினர். ஜெயராஜின் மனைவி செல்வராணி, உறவினர்கள் ஜோசப், ஜெயசீலன், தேசிங்குராஜா, தாவீது, வினோத்குமார் சார்பில் ஸ்ரீதர் மனுவுக்கு பதிலளிக்கப்பட்டது.

பின்னர் ஸ்ரீதர் வாதிடுகையில், விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதாக மனு தாக்கல் செய்யவில்லை. அரசு தரப்புக்கு சாதகமாக இருக்கும் நோக்கத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். மனுவை ஏற்க வேண்டும் என்றார்.

செல்வராணி தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், வழக்கில் 105 சாட்சிகளில் 53 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. பெரும்பாலான சாட்சியங்கள் ஸ்ரீதருக்கு எதிராகவே உள்ளன. ஜெயராஜ், பென்னிக்ஸை நன்றாக அடி' என உதவி ஆய்வாளரிடம் ஸ்ரீதர் கூறியதாக சாட்சியம் உள்ளது. தந்தை, மகனின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஸ்ரீதர் ரசித்ததாகவும் பெண் காவலர் கூறியுள்ளார். மற்ற காவலர்களால் என் உயிருக்கு ஆபத்து என ஏற்கெனவே ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் அப்ரூவர் தேவையில்லை. ஸ்ரீதர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். சம்பவத்தின் மூளையே ஸ்ரீதர்தான். இவரால் தான் இச்சம்பவமே நிகழ்ந்தது. இந்த வழக்கை சிபிஐ முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளது. காவல் துறையில் 4 முக்கிய சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் ஸ்ரீதரின் சாட்சியம் தேவை இல்லை என்றார்.

பின்னர் நீதிபதி முத்துக்குமரன், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை, மருத்துவ அறிக்கைகள், சாட்சியங்கள் அனைத்தும் ஸ்ரீதருக்கு எதிராக உள்ளன. இதனால், வழக்கில் அப்ரூவராக மாறுவது தொடர்பாக மனுத் தாக்கல் செய்ய வேண்டும். மனுவைப் பொருத்து ஸ்ரீதரின் கோரிக்கையை ஏற்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும். விசாரணை ஜூலை 31-க்கு தள்ளி வைக்கப்படுகிறது, என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in