கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ஒடிசா, அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று (ஜூலை 22) முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 5 செ.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in