திருக்குறளில் கலப்படம் செய்யும் ஆளுநர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

திருக்குறளில் கலப்படம் செய்யும் ஆளுநர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: திருக்குறளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலப்படம் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 'தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு கடந்த ஜூலை 13-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப்பரிசு வழங்கினார். திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை அல்லது சொற்பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். இவ்விவகாரம் குறித்து தமிழக மக்களிடம் ஆளுநர் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in