

புதுச்சேரி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற அமித் ஷாவின் கருத்தை திட்டவட்டமாக மறுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் அதிமுகவும் பாஜகவும் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். இது அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமித் ஷாவின் ‘கூட்டணி ஆட்சி’ என்ற நிலைப்பாடு குறித்து புதுச்சேரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று மட்டும் ஒரே வரியில் கூறிவிட்டு, எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். இதன்மூலம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி வெற்றி பெற்றால், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் கருத்தை அவர் முற்றிலும் மறுத்துள்ளது தெரிய வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமியின் ‘அதிமுக ஆட்சி மட்டுமே’ என்ற கருத்தும் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின்போது பொதுமக்கள் மத்தியில் பேசும்போதும், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக கூறி வருவதும் கவனிக்கத்தக்கது.