சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்: அன்புமணி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்: அன்புமணி
Updated on
1 min read

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் என்.எம்.ஆர் (Nominal Muster Roll) பணியாளர்கள் 133 பேரும், தினக்கூலி பணியாளர்கள் 107 பேரும் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை ஜூலை 11-ஆம் நாள் பல்கலைக்கழக வளாகத்தில் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தினக்கூலி தொழிலாளர்களை குடும்பத்துடன் போராடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் என்.எம்.ஆர் பணியாளர்களும், தினக்கூலி பணியாளர்களும் 15 முதல் 20 ஆண்டுகளாக இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு போராட்டத்திலும் அவர்களுக்கு பாமக ஆதரவளித்திருக்கிறது. பலமுறை அவர்களை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகம் முயன்ற போது சட்டப்பேரவையிலும், அதற்கு வெளியிலும் குரல் கொடுத்து பணி நீக்கத்தை பா.ம.க. தடுத்து நிறுத்தியிருக்கிறது. தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க இப்போது அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் பாமக முழுமையாக ஆதரிக்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழக தினக்கூலி பணியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவற்றை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் அனைவரும், அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியை பெற்றவர்கள் ஆவர். இவர்களின் நியமனம் முழுவதும் விதிகளின்படியும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதலுடனும் தான் செய்யப்பட்டுள்ளது. பணி நிலைப்பு செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்ட தினக்கூலி பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய திமுக அரசு மறுப்பது சமூக அநீதி ஆகும்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒரே ஒரு தற்காலிக பணியாளர் கூட பணிநிலைப்பு செய்யப்படவில்லை.

அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தமிழக அரசு விளையாடுவது நியாயமல்ல. இனியும் தாமதிக்காமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் என்.எம்.ஆர் பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் 240 பேரையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும்; அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை தடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in