

மதுரை: “யாராலும் வீழ்த்தவும், தவிர்க்கவும் முடியாத கட்சி மதிமுக. 2026 சட்டப்பேரவை தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் 10 அல்லது 11 சீட் வரை கேட்க வேண்டி வரலாம்.” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுக சார்பில் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் மாநாடு திருச்சியில் செப்.15-ல் நடக்கிறது. இதில் கட்சியினர் பங்கேற்பது குறித்த மண்டல செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஜார்ஜ் பெர்னான்டஸ், பாமக தலைவர் ராமதாஸ் போன்ற தலைவர்களை அழைத்து சென்னை கடற்கரையில் பிரம்மாண்டமாக அண்ணா பிறந்த நாள் மாநாடு நடத்தி உள்ளோம். இது போன்று அண்ணாவை கொண்டாடுவதில் தனித்துவம் காட்டுவோம்.
கடந்த 31 ஆண்டில் ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம், என்எல்சி தனியார் மயம், சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் போன்ற எண்ணற்ற தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை தடுக்க, வாழ்வாதாரம் காக்க போராடியுள்ளோம். இதில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஊழலற்ற தமிழகத்திற்காக மதுவை ஒழிக்க எழுச்சிப் பயணம் செய்துள்ளோம்.
வைகோ மாறி,மாறி கூட்டணிக்கு தாவுகிறார் என்றெல்லாம் பேசினர். இந்நிலையில் தான் இந்துத்துவ, ஆர்எஸ்எஸ் போன்ற சக்திகள் தமிழகத்தை கபளீகரம் செய்ய மூர்க்கத் தனமாக வருவதை உணர்ந்தோம். எங்களை போன்ற தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த திராவிட இயக்கத்தை காப்பது கடமை என, கருதி 7 ஆண்டுக்கு முன்பு இருந்து திமுகவுக்கு ஆதரவளித்து பக்க பலமாக உள்ளோம்.
கிறிஸ்துவ, இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை ஓட்டுக்களை ஒழிக்க நினைக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் அரணாக இருப்போம். அந்த வகையில் இந்துத்துவா சக்திகளை தடுக்கும் நோக்கில் திருச்சியில் செப்., 15-ல் நடக்கும் அண்ணா பிறந்த நாள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திரண்டு, வரலாறாக அமையவேண்டும். எங்களது தொண்டர்களிடம் காசு இல்லை என்றாலும், போஸ்டர், சுவர் விளம்பரங்களை செய்து அழைக்க திட்டமிடுகிறோம்.
இதன் ஒரு பகுதியாக மண்டலம் வாரியாக செயல்வீரர் கூட்டம் நடத்துகிறோம். தமிழகத்தில் மதுவிலக்கு கோரி பெண்கள் உள்ளிட்டோர் போராடுகின்றனர். தமிழக முதல்வரும் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என உறுதியளித்துள்ளார். திமுக கூட்டணியில் தொடருவோம், அவ்வியக்கத்தை காக்கவே பக்க பலமாக உடன்படுவோம். கூட்டணியில் உறுதியாக இருப்போம். வசதியின்றி இருந்தாலும் 1994 முதல் எங்களது தொண்டர்கள் வீறு கொண்டு உணர்ச்சியோடு இயக்கத்தில் பணிபுரிகின்றனர். யாராலும் வீழ்த்தவும், தவிர்க்கவும் முடியாத கட்சி மதிமுக.
சட்டப்பேரவை தேர்தலில் 8 தொகுதியில் போட்டியிட்டால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் 10 அல்லது 11 சீட் கேட்க வேண்டி வரலாம் என, கருத்து உள்ளது. ஆனால் , 25 தொகுதிகள் மதிமுக கேட்க இருக்கிறது என, அறைக்குள் உட்கார்ந்து கற்பனையில் எழுதுவது தர்மம் அல்ல.
அதிமுகவை திராவிட இயக்கமாக நான் ஒப்புக்கொள்ளவில்லை. அக்கட்சி தவறு செய்கிறது. அதனால் அதிமுகவுக்கு இந்த சுற்றுப்பயணத்தில் பலன் கிடைக்காது. கலையுலகில் இருந்து வந்த விஜய் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார் என்றே அவர் பற்றி கருத்து சொல்ல முடியும். ஆட்சியில் தவறு எதுவும் நடக்கக்கூடாது என, முதல்வர் எச்சரிக்கையாக இருக்கிறார். அந்த நல்ல எண்ணத்தில் தான் மதுரை மாநகராட்சி விவகாரத்தில் அவர் நடவடிக்கை எடுத்திருப்பதாக பார்க்கிறேன். கடலூர் ரயில்வே சம்பவம் வருத்தமளிக்கிறது. இது போன்ற விபத்துக்களை தடுக்க ரயில்வே அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.