Published : 06 Jul 2025 02:21 PM
Last Updated : 06 Jul 2025 02:21 PM

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துவதில்லை - ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

சென்னை: பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துவதில்லை என்று தமாகா(மூ) தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. கீழதாயில்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. சுமார் 50 அறைகள் கொண்ட பட்டாசு ஆலையில் 15 அறைகள் சேதமடைந்து, பக்கத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கும் தீ பரவி அங்குள்ள பட்டாசுகளும் வெடித்துச் சிதறியது.

இந்த பயங்கர வெடிவிபத்தில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் பட்டாசு ஆலைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை முறையாக சரியாக கண்காணித்து மேற்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலைகளையும், ஆலைகளின் உரிமையாளர்களையும், தொழிலாளர்களின் தொழிலையும் பாதுகாக்க தமிழக அரசு முறையான தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழக அரசு பட்டாசு ஆலைகளின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்தாமல் தொடர்ந்து கண்காணிக்காமல் உரிய நடவடிக்கையை எடுக்காமல் இருப்பதால் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தமிழக அரசின் அலட்சியப் போக்கால், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பற்ற தன்மையால் உழைக்கும் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே தமிழக அரசு பட்டாசு ஆலைகளின் பாதுகாப்புக்கும், தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மேலும் தமிழக அரசும், பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்களும் தொழிலாளர்களின் பாதுகாப்பான தொழிலை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழக அரசு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.' இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x