Published : 04 Jul 2025 03:53 PM
Last Updated : 04 Jul 2025 03:53 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், சிறுவனை கடத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் ரோகித் உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். ஆனால், மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால், சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் ரோஹித் கிடைக்கவில்லை.
இதையடுத்து அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என போலீஸாரை கண்டித்து உறவினர்கள் அஞ்செட்டியில் நேற்று சாலை மறியல் செய்தனர். அதன்பின், போலீஸார் விசாரணையில் சிறுவனை இரு இளைஞர்கள் காரில் அழைத்து சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த இளைஞர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் மாணவரை கொலை செய்து வீசியதாக அவர்கள் தெரிவித்தனர்.
கொலைக்குக் காரணம் என்ன? - இதனையடுத்து, போலீஸார் மாவநட்டியை சேர்ந்த புட்டனா என்பவரது மகன் மாதேவன் (22) மற்றும் கர்நாடக மாநிலம் மாதேவா (21) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் போலீஸிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாவநட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், மாவநட்டியை சேர்ந்த புட்டனா என்பவரது மகன் மாதேவனும் தனிமையில் இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்துள்ளார். இதனை வெளியே சொல்லிவிடுவார் என அச்சப்பட்டு ரோஹித்தை காரில் கடத்திச் சென்று மது அருந்தவைத்து பிறகு கத்தியால் குத்தியும், காலில் வெட்டியும் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT