நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி: கிருஷ்ணகிரியில் அறிமுகம் - சிறப்பு அம்சம் என்ன?

நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் | கோப்புப் படம்
நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே பாஸ்போர்ட் சேவையை பெறும் வகையில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி ( Mobile Passport Seva van) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: “பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே மிகவும் குறைவாக இருக்கிறது. இதில் சென்னை மாவட்டமும் அடங்கும். அனைத்து தரப்பினரும் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது மிகவும் எளிமைப்படுத்தப் பட்டுள்ளது.

சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் 30 நாட்களிலும், தட்கல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் 7 நாட்களிலும் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்திய பிரஜை தானா என்பதையும் அவரது இருப்பிடத்தை உறுதி செய்யவும் போலீஸ் வெரிபிகேஷன் பெறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு இ-பாஸ்போர்ட் வழங்கி வருகிறோம். இ-பாஸ்போர்ட் முறையில் இமிகிரேஷன் நடைமுறைகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மண்டலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் இ-பாஸ்போர்ட் வழங்கியுள்ளோம். சராசரியாக பார்த்தால் தினசரி 2,500 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே பாஸ்போர்ட் சேவையை பெறும் வகையில் சோதனை அடிப்படையில் சென்னையில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதியை (Mobile Passport Seva van) நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி அறிமுகப்படுத்தப் படுகிறது.

இந்த சேவைக்கு அம்மாவட்டத்தை சேர்ந்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பாஸ்போர்ட்டுக்காக ஆன்னைலில் விண்ணப்பிக்கும்போது, 'நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் - கிருஷ்ணகிரி மாவட்டம்' என்பதை தேர்வு செய்தால் அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே பாஸ்போர்ட் சேவையை பெறலாம். அந்த வகையில் ஜூலை 7, 8, 9 ஆகிய 3 நாட்கள் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிற்கும். தினசரி 30 பேருக்கு இந்த சேவையை பெறலாம். கிருஷ்ணகிரியை தொடர்ந்து கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இச்சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் சேவை எளிதாக கிடைக்கும் வகையில் வெளியுறவு அமைச்சகம் தபால் துறையுடன் இணைந்து தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. சென்னையில் 3 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் இதேபோல், 13 மையங்கள் செயல்படுகின்றன. பெரம்பூரில் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இதுதொடர்பாக தபால் துறையுடன் ஆலோசனை செய்து வருகிறோம். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களின் இலக்கு. பாஸ்போர்ட் சேவை தொடர்பாக எதேனும் குறைகள் இருந்தால் பொதுமக்கள் எங்களுக்கு மின்னஞ்சல், ஹெல்ப்லைன், வாட்ஸ்-அப் வாயிலாக தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விஜயகுமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in