‘ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு’ - அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை

‘ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு’ - அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை
Updated on
1 min read

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவர், ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.

கோயில் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் கடுமையாக தாக்குவதை கோயில் பணியாளர் ஒருவர், கழிவறையில் மறைந்திருந்து வீடியோ எடுத்தார். இதனால் அவர் நேரடி சாட்சியாக உள்ளார். வீடியோ எடுத்தவர் இன்று (வியாழக்கிழமை) தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு இமெயிலில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது: போலீஸார் தாக்கி அஜித்குமார் மரணமடைந்த வழக்கில், ஜூன் 1-ம் தேதி உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் நேரில் ஆஜராகி சாட்சி அளித்துள்ளேன். அஜித்குமார் வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் ராஜா என்பவர் பல்வேறு குற்றப்பிண்ணனி உடைய ரவுடிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

ஜூன் 28-ம் தேதி காலையில் தனிப்படை போலீஸார் விசாரணையில் நான் காவலர் ராஜாவை நேரில் சந்தித்தேன். அப்போதே என்னை கடுமையாக மிரட்டி வந்தார். இதனால் எனக்கும், என்னை சார்ந்தோருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த வழக்கில் சாட்சியாக உள்ள எனக்கும், மற்றவர்களுக்கும் ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுவும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கடித நகலை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு பதிவாளருக்கும், தென்மண்டல ஐஜிக்கும் அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in