Published : 03 Jul 2025 05:45 AM
Last Updated : 03 Jul 2025 05:45 AM
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திருப்புவனம் கொடூர சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருப்புவனம் கொடூர நிகழ்வு பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். விரைந்து கைதும் செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். வழக்கும் உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு, அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாதவை. இன்று அதை நிறைவேற்றிக் காட்டியுள்ளார் முதல்வர்.
பழனிசாமி ஆட்சியின்போது சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருமே உடல்நல குறைவால் இறந்தார்கள் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்றும் ஆணவத்தோடு, அலட்சிய மனப்பான்மையோடு பேசியவர்தானே நீங்கள். அப்போது நீதி எங்கே போனது. உங்களுக்கு மனசாட்சி இல்லையா. உங்கள் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT