

சென்னை: மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன் என்றும், இதில் ஏதாவது சிக்கல் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில, நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை கடந்த ஏப்.28-ம் தேதிக்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவில் அரசியல் கட்சியினர், பிற அமைப்பினர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் முறையாக அனுமதி பெற்று நிரந்தர கொடிக் கம்பங்களை வைத்துக் கொள்ளலாம் என்றும், தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு உரிய வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும், எனவும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீதம் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, பொதுக்கூட்டங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும், சாலையோரங்களிலும், சாலையின் நடுவிலும் எக்காரணம் கொண்டும் கொடிக்கம்பங்களை நடக்கூடாது என்றும் உத்தரவி்ட்டிருந்தார்.
மேலும், இதுதொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி கொடிக்கம்பங்கள் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் இல்லை என்பதை உறுதி செய்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஜூலை 2-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட ஆட்சியர்கள் ஜூலை 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும், எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ‘‘தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் பொது இடங்களில் இருந்த கொடிக்கம்பங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டு வி்ட்டது என்றும், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 90 சதவீதம் கொடிகள் அகற்றப்பட்டுள்ளது என்றும், சென்னையில் 31 சதவீதம் மட்டுமே கொடிகள் அகற்றப்பட்டுள்ளது எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.
மேலும், பொது இடங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு வாடகை வசூலிப்பது குறித்தும், மற்ற மாவட்டங்களில் கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றியது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தலைநகரான சென்னையில் 31 சதவீத கொடிக்கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளதால், சென்னையில் முழுமையாக அகற்றாதது ஏன் என்றும், அதில் ஏதாவது சிக்கல் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் சாலை நடுவில் தடுப்புகளின் அருகே கொடிக்கம்பங்களை நட அனுமதியளித்துள்ளீர்கள், இது அபாயகரமானது என்றும், விலை மதிப்பில்லாத மனித உயிர்களுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். பின்னர் அரசின் கோரிக்கையை ஏற்று இந்த விவகாரத்தி்ல் பதிலளிக்க ஜூலை 24-ம் தேதி வரை அவகாசம் வழங்கினார்.
இந்த காலக்கட்டத்துக்குள் நீதிமன்ற உத்தரவுப்படி பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் கட்டாயம் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும், என எச்சரித்து விசாரணையை ஜூலை 24-க்கு தள்ளி வைத்துள்ளார்.