Published : 02 Jul 2025 08:26 PM
Last Updated : 02 Jul 2025 08:26 PM
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பி நவீன்குமாரை, தவெக தலைர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்தார். அப்போது அவர்களிடம் விஜய், “உங்களுக்கு எப்போதும் நாங்கள் துணையிருப்போம். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை எங்களது தொடர் ஆதரவை வழங்குவோம். இனிவரும் காலங்களில் காவல் துறை சித்ரவதையில் யாரும் உயிரிழக்காத வகையில் அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்,” என்று ஆறுதல் கூறினார்.
முன்னதாக, அஜித்குமாரின் வீட்டுக்கு விஜய் வரும் தகவல் கசியவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும், விஜய் வந்திருக்கும் செய்தி, அப்பகுதியில் பரவத் தொடங்கியதும் அஜித்குமாரின் வீட்டு வாசலில் ஏராளமான மக்கள் திரளத் துவங்கினார். இதனால், விஜய் 10 நிமிடங்களுக்குள் அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பி நவீன்குமாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சந்திப்பின்போது, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT