“இது ஓர் அரச பயங்கரவாதம்” - அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன் ஆவேசம்

அஜித்குமாரின் குடும்பத்தினரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
அஜித்குமாரின் குடும்பத்தினரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
Updated on
1 min read

திருப்புவனம்: “அஜித்குமார் கொலையை போலீஸ் ‘எக்ஸஸ்’ என்ற சொல்லுக்குள் சுருக்கிவிட முடியாது. இது ஒரு ‘ஸ்டேட் டெரரிஸம்’. இந்த அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அஜித்குமாரை சித்ரவதை செய்து கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. 5 காவலர்களைக் கைது செய்தது ஆறுதல் அளிக்கிறது என்றாலும், இச்சம்பவம் ஆறாத் துயரம்.

காவல் துறை விசாரணையில் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. தமிழகம் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது ஆறுதலைத் தருகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அவரின் நேர்மையை உறுதிப்படுத்துகிறது.

முதல் தகவல் அறிக்கை பதியாத ஒரு வழக்கில் போலீஸார் விசாரணையே செய்யக் கூடாது என்பதுதான் சட்டம். இந்த விசாரணையை நடத்தியது அத்துமீறல். காவல் துறையினர் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ரவுடிகள் போல் செயல்படுகின்றனர் என்று உச்ச நீதிமன்றமே விமர்சித்துள்ளது. அந்த அளவுக்கு போலீஸாரின் அதிகார, ஆணவம் அவ்வப்போது வெளிப்பட்டு வருகிறது. விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகளை போலீஸார் பின்பற்றுவதில்லை.

அஜித்குமார் கொலையை போலீஸ் ‘எக்ஸஸ்’ என்ற சொல்லுக்குள்ளே சுருக்கிவிட முடியாது. இது ஒரு ‘ஸ்டேட் டெரரிஸம்’. இந்த அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அஜித்குமார் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கைதானவர்களை ஜாமீனில் வெளியே விடாமல், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். குற்றம் செய்தோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். கைதானவர்களை பிணையில் வெளியே விடாமல் விசாரிக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் விசாரித்து நீதி வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

#சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் #அஜித்குமார் என்னும் இளைஞர் காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலால் படுகொலையாகியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
தம்பி அஜித்குமார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து… pic.twitter.com/HLhWEu0cE4

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in