‘அஜித்குமார் கொலையில் சிசிடிவி ஆதாரம் அழிப்பு, நீதிபதிகள் அதிர்ச்சி...’ - வழக்கறிஞர் ஹென்றிடிபேன் விவரிப்பு
மதுரை: அஜித்குமார் கொலை வழக்கு வழக்கில், மதுரை 4-வது கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இரண்டு, மூன்று நாட்களில் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர் ஹென்றிடிபேன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 1) உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்குப் பிறகு, வழக்கறிஞர் ஹென்றிடிபேன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்ரவதையால், ஒரு சிறப்பு விசாரணைக் குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித்குமார் சார்பாக பல அமைப்புகள், இயக்கங்கள், வழக்கறிஞர்கள், திருப்புவனத்தில் பணிபுரிகின்ற வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து, நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். எனவே, இந்த வழக்கில் வாதாடிய அனைத்து வழக்கறிஞர்களின் சார்பாக பேசுகிறேன்.
எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் விசாரணை: உயர் நீதிமன்ற விசாரணையின்போது, கடந்த 27-ம் தேதி நடந்த சம்பவம், நகையை தொலைத்த பெண், அஜித்குமாரின் மீது சந்தேகப்பட்டு திருப்புவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார், அந்தப் புகாருக்கு 27-ம் தேதியன்று ரசீது மட்டும் கொடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. 28-ம் தேதி காலை 10.30 மணிக்குத்தான் நகை தொலைந்து போனது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பே, மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்படுகின்ற தலைமைக் காவலர் தலைமையிலான ஒரு சிறப்பு விசாரணைக் குழுவிடம் எஃப்ஐஆர் பதிவு செய்யாத நேரத்தில், வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு விசாரணைக் குழு அஜித்குமாரையும், பின்னர் அருண், அவரது தம்பி நவீன் உள்ளிட்ட மற்றவர்களையும், 27-ம் தேதி இரவு முதல் 28-ம் தேதி நாள் முழுவதும், திருப்புவனத்தைச் சுற்றியிருக்கிற நான்கு பகுதிகளுக்குக் கூட்டிச் சென்று மிக கொடூரமான சித்ரவதை செய்தார்கள் என்ற தகவலைக் கேட்ட நீதிபதிகள் ஆவேசத்துடன் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
வீடியோ எடுத்த கோயில் பணியாளர்: மடப்புரம் கோயிலின் பின்புறத்தில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்துக்கு அஜித்குமாரை இறுதியாக அழைத்துச் சென்ற சிறப்பு விசாரணைக் குழுவினர் ஒளித்து வைத்திருக்கக்கூடிய 10 பவுன் நகை எங்கே என்று கேட்டு, அந்தப் பகுதியில் தேடியுள்ளனர். அது கிடைக்கவில்லை என்றவுடன், அஜித்குமாருக்கு தண்ணீர்கூட கொடுக்காமல், அவரது கண் மற்றும் வாயில் மிளகாய்ப் பொடியை வீசியுள்ளனர் என்பதையும் எங்களது வாதத்தில் குறிப்பிட்டோம். இந்தச் சம்பவத்தை கோயிலின் கழிவறையில் இருந்து பார்த்து, செல்போனில் வீடியோ எடுத்தவர், கோயிலில் பணி செய்யக்கூடிய பணியாளர்.
கோயிலின் கழிவறையில் இருந்து ஒரு 15 முதல் 20 விநாடிகள்தான் அந்த வீடியோவை அவரால் எடுக்க முடிந்திருக்கிறது. அந்த வீடியோவை பொறுப்புடன் பத்திரமாக வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ இன்று நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது. இதனால், உண்மையாகவே அங்கு நடந்த சம்பவத்தை நீதிமன்றத்தால் பார்க்க முடிந்தது. இதுதவிர அந்த இடத்தில் கிடந்த கம்பு, பைப்புகள் உள்ளிட்ட புகைப்பட ஆதாரங்களும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
ஆதாரங்கள் அழிப்பு: அரசுத் தரப்பில், காவல் நிலையத்தில் இருக்கக் கூடிய சிசிடிவி காட்சிப் பதிவுகளை நீதிமன்றத்தில் வழங்க தயாராக இருப்பதாக கூறினார்கள். ஆனால், கோயிலில் இருக்கக் கூடிய சிசிடிவி காட்சிப் பதிவுகளை அழிக்க வேண்டும் என்ற காரணத்தால், 29-ம் தேதி காலை ராமச்சந்திரன் என்ற உதவி ஆய்வாளர் அங்குள்ள டிவிஆரை பறித்து சென்றார் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. நாங்களும் அதையே கூறினோம்.
44 இடங்களில் கொடூர காயங்கள்: அதன்பிறகு, உடற்கூராய்வு அறிக்கை கொடுக்கவில்லை என்ற காரணத்தால், மருத்துவரை வரவழைத்து நீதிபதிகள் மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கையைப் பெற்றனர். அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் கொடூர காயங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சாதாரண கொலை வழக்கில்கூட இத்தனை காயங்கள் இருக்காது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அப்போது அரசுத் தரப்பில், இது நடக்கக் கூடாத ஒரு சித்ரவதை, வன்முறை என்று கூறப்பட்டது.
விசாரணை அதிகாரி நியமனம்: மதுரை 4-வது கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நீதிபதியிடம் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இரண்டு, மூன்று நாட்களில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை அவர் ஆய்வு செய்து, ஜூலை 8-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்றம் எதிர்பார்ப்பு: அரசுத் தரப்பில் சிபிசிஐடி விசாரணை தொடரும் என்றும், அதே தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. சாட்சிகளை யாரும் மிரட்டக் கூடாது என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், இந்த வழக்கில், அரசு மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல், ஏடிஎஸ்பி சுகுமார் என்பவர், வீடியோவில் வரும் கோயிலின் பின்வாசல் பகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு சாக்குப்பையில் எடுத்துச் சென்ற தகவலையும் நீதிமன்றத்தில் கூறினோம். அப்போது அரசுத் தரப்பில் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம். மானாமதுரை டிஎஸ்பி-யை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.
