அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, “சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் மரணம் வழக்கு கு.எண்:303/2025 கொலை வழக்காக மாற்றப்பட்டு கொலை குற்றச்சாட்டில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை கைது செய்து 15.07.2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு மேலும் விசாரணைக்காக சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார்.

அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை அறிக்கை: இதற்கிடையில், காவல்துறை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெளியிட்ட அறிக்கையில், “அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கியது பிரேதப் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. அவரது உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது.

கடந்த காலங்களை ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

15 நாட்கள் காவல்: கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவலர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in