‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ - தமிழக பாஜக சரமாரி கேள்வி

‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ - தமிழக பாஜக சரமாரி கேள்வி
Updated on
2 min read

சென்னை: “அஜித்குமாரின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்போது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ்தள பதிவில் வெளியிட்ட பதிவு: “காவல் துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24 மணி நேரத்துக்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோயில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று தாக்கியுள்ளனர்.

விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை போலீஸார் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கியது யார்? விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து ‘உண்மையை’ வரவழைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா, உண்மை எனில், யார் அவர், அவர் மீது என்ன நடவடிக்கை?

இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் வாகனத்தில் பூட்டி வைக்கப்பட்டது ஏன், எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா அல்லது உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசமா?

நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்துக்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல் துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?

அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும், இது கொலைதான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித்குமாரின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்போது வரையில் ஏன் பதியவில்லை, ஏன் கைது செய்யவில்லை?

இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித்குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சினையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது அராஜக செயலாகும்.

நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட திமுக அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்போது வழக்கு பதிவு, இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா, தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா?” என்று அவர் கூறியுள்ளார்.

ஹெச்.ராஜா வலியுறுத்தல்: இதனிடையே, அஜித்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராசா, “ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 50 மாதங்களில் 25 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2 மாதங்களுக்கு ஒருவர் வீதம் உயிரிழக்கின்றனர். அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் 6 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்தது போதாது. அவர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும்.

அஜித்குமார் குடும்பத்துக்கு நிவாரணம் கொடுக்காதது ஏன்? சாத்தான்குளத்தில் இருவரை போலீஸார் அடித்துக் கொன்றபோது கனிமொழி, மு.க.ஸ்டாலின் அங்கு சென்றனர். அஜித்குமார் இந்து என்பதால் இங்கு வரவில்லையா? அதனால்தான் நிவாரணம் தரவில்லையா? இப்பிரச்சினையை நீதித்துறை கவனித்துக் கொள்ளும்.

2026-க்கு பிறகு திமுக ஆட்சியில் இருக்காது. தற்போதைய அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிறைக்குச் செல்ல உள்ளனர். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். ஆனால், வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லை. சிபிஐ விசாரணை நடத்தினால்தான் நியாயம் கிடைக்கும். மடியில் கனம் இல்லை என்பதை நிரூபிக்க முதல்வர் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in