Published : 30 Jun 2025 05:08 AM
Last Updated : 30 Jun 2025 05:08 AM
சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் பணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் உற்பத்தி முதல் விற்பனை வரை என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி விற்பனையை கண்காணிக்க டாஸ்மாக் நிர்வாகம் டிஜிட்டல்மயமாகி உள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலும், செல்போன் வடிவலான கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்து அதன் பிறகே விற்கப்படுகிறது.
இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளிலும், நேரடியாக கைகளில் பணம் பெறுவதை தவிர்த்து செல்போன் செயலி வழியான பணப்பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
25 சதவீதம்.. தினசரி கூட்டம் அதிகமுள்ள கடைகளில் அதிகபட்சமாக 40 சதவீதம் அளவிலும், குறைவான கூட்டம் இருக்கும் கடைகளில் 25 சதவீதம் அளவிலும் டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஆனால், சில ஊழியர்கள் இதை பின்பற்றாமல் பணத்தை நேரடியாக கைகளில் பெறுகிறார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், டிஜிட்டல் முறையில் பணம் வசூல் செய்வது 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்கும் மதுக்கடை ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு டாஸ்மாக் மேலாளர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கை: மேலும், அந்த நோட்டீஸில், டிஜிட்டல் பண வசூல் குறைவாக இருப்பதால், உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இலக்கு நிர்ணயித்து டிஜிட்டல் முறையில் பணம் வசூல் செய்ய சொல்வது பணியாளர்கள் விரோத நடவடிக்கை என குற்றம்சாட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT