Published : 29 Jun 2025 06:07 PM
Last Updated : 29 Jun 2025 06:07 PM

2026 தேர்தலை பாமக ஒரே அணியாக எதிர்கொள்ளும்: பொருளாளர் சையத் மன்சூர் உறுதி

சிவகாசி: 2026 சட்டப்பேரவை தேர்தலை பாமக ஒரே அணியாக எதிர்கொள்ளும், என அக்கட்சியின் பொருளாளர் சையத் மன்சூர் உசேன் தெரிவித்தார்.

சிவகாசியில் பாமக சார்பில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமை வகித்தார். நிறுவனர் ராமதாஸால் நியமிக்கப்பட்ட பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், தென் மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் முரளி சங்கர் பேசுகையில்: 36 ஆண்டுகளாக தமிழகத்தில் மிகவும் சிறுபான்மை சமூகமான பழங்குடியின இனத்தைச் சேர்ந்த என்னை பொதுச்செயலாளராக நியமித்த தலைமைக்கு நன்றி. முன்னாள் பொருளாளர் திலகபாமா பேசிய ஆடியோவில், “ஐயாவை வைத்துக்கொண்டு எப்படி கட்சி நடத்த முடியும்?” எனக் கூறியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.

மூத்த நிர்வாகிகளை திலகபாமா தரக்குறைவாக நடத்தியதால் பலர் கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தவர்கள் தற்போது மீண்டும் கட்சிப் பணியாற்ற தொடங்கியுள்ளனர். ராமதாஸை விட்டு விலகியது போல், அன்புமணி ராமதாஸை விட்டும் திலகபாமா விலகுவது தான் அவருக்கும், கட்சிக்கும் நல்லது.” என்றார்.

கூட்டத்திற்கு பின் பொருளாளர், பொதுச்செயலர் கூட்டாக அளித்த பேட்டியில், “நிறுவனர் ராமதாஸ் இடம் தான் அனைத்து அதிகாரமும் இருப்பதால் அவரது நியமனம் மட்டும் தான் செல்லும். பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை பொதுச் செயலாளராக நியமித்து உள்ளதை இலந்தை பழம் விற்பவர்களுக்கு பதவி என அன்புமணி கூறுவது தவறு. ராமதாஸ் மிகவும் நிதானமாக தெளிவாக முடிவுகளை எடுக்கிறார். வெற்றிக் கூட்டணியை ராமதாஸ் அமைப்பார். விரைவில் பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதற்கு முன் உட்கட்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்படும். 2026 சட்டப்பேரவை தேர்தலை பாமக ஒரே அணியாக எதிர்கொள்ளும்.” என்றனர்.

பொதுக்குழு கூட்டத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x