Published : 29 Jun 2025 04:29 PM
Last Updated : 29 Jun 2025 04:29 PM
மதுரை: தமிழகத்தில் 2026-ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பாலையில் நடந்த தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனவரி.9-ல் தேமுதிக நிலைப்பாட்டை தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெளிவாகப் பேசியுள்ளார். அப்போது கூட்டணி குறித்து அவர் தெரிவிப்பார்.
செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது போல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேமுதிகவை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் 2011-ல் விஜயகாந்த் தலைமையில் 29 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு சென்றனர். அதேபோல பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலும் கூடுதல் எம்எல்ஏக்கள் கோட்டைக்கு செல்வதே எங்கள் ஆசை. அதற்காக நான் பாடுபடுகிறேன்.
விஜய் தேர்தலுக்கு வருவது அவரது பலம். அது அவரது கட்சி. கேப்டன் விஜயகாந்த் வேறு, விஜய் வேறு. தேமுதிகவை சங்கடப்படுத்த எந்த கட்சியாலும் முடியாது. திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எங்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை. கேப்டன் ஆரம்பித்த கட்சி தோற்கக் கூடாது. யாருடன் கூட்டணி வைத்தால் ஜெயிக்கலாம் என்று தான் முடிவெடுப்போம்.
தமிழகத்தில் 2026-ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி தான் அமையும். திராவிட சித்தாந்தம் கொண்ட கட்சிகள் தான் கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்நாடு என்பது திராவிட நாடு, திராவிடக் கொள்கைகள் கொண்ட கட்சிகள் தான் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கான சாத்தியம் உள்ளது.” என்று விஜய பிரபாகரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT