120-வது பிறந்தநாள் விழா: ம.பொ.சி.க்கு அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை

120-வது பிறந்தநாள் விழா: ம.பொ.சி.க்கு அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை
Updated on
1 min read

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் மா.பொ.சிவஞானத்தின் 120-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரரும், சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவருமான மா.பொ.சிவஞானத்தின் 120-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அதன் அருகே அவரது திருவுருவப் படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன் உள்ளிட்டோர் மா.பொ.சி. படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர் கரு.நாகராஜன், மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாவட்டச் செயலாளர் அப்பு, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரும் தி.நகரில் மா.பொ.சி. படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மா.பொ.சி. பிறந்தநாளை ஒட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: சென்னை மாநகரம் ஆந்திராவுடன் இணைக்கப்படுவதை தடுத்து தமிழகத்துடன் இணைவதற்கும், கன்னியாகுமரி, செங்கோட்டை போன்ற பகுதிகள் கேரளாவுடன் இணையாமல் தடுக்கப்பட்டதற்கும் மா.பொ.சி. நடத்திய போராட்டம் முக்கிய காரணமாகும். அவரது பிறந்தநாளில் அவர்தம் பெருமையையும், சேவையையும் போற்றி வணங்குவோம்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ் மொழியின் மீதும், பாரத தேசத்தின் மீதும் மதிப்பும், பற்றும் கொண்டு தன் வாழ்நாளை தேசத்துக்காக அர்ப்பணித்த விடுதலைப் போராட்ட வீரர் ம.பொ.சிவஞானத்தின் பிறந்தநாளில், அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது சென்னை, திருத்தணி, குமரி மாவட்ட பகுதிகள் தமிழகத்திலிருந்து பிரிக்கப்படாமல் இருக்க போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட ம.பொ.சி.யின் புகழைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in