ஸ்ரீவில்லி. பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் உட்பட 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை - நடந்தது என்ன?

ஸ்ரீவில்லி. பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் உட்பட 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை - நடந்தது என்ன?
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் மற்றும் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த அர்ச்சகர்கள், வீட்டில் ஆபாசமாக ஆடும் வீடியோ வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களை நீக்கி கோயில் விவகாரத்தில் தலையிட தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக, கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் (30), கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள அர்ச்சகர்களுடன் சேர்ந்து வீட்டில் ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் ஓர் அர்ச்சகர் ஆபாசமாக ஆடுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் மீது கோமதி விநாயகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெரிய மாரியம்மன் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில் செயல் அலுவலருமான சர்க்கரையம்மாள், செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஆகியோர் ஆண்டாள் கோயில் அலுவலகத்தில் வைத்து அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ‘ஜூன் 15-ம் தேதி பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணி செய்தது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதியாகி உள்ளது. மேலும் அர்ச்சகர் கோமதி சங்கர் மற்றும் 3 உதவி அர்ச்சகர்கள் மதுபோதையில் ஆபாச நடனமாடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செயல் அலுவலர் தூண்டுதலின் பேரில் அறநிலையத் துறைக்கு தகவல் அளிக்காமல் போலி ரசீது அச்சடிக்கப்பட்டு பணம் வசூல் செய்யப்படுகிறது.

கோயிலில் கணக்கர் மற்றும் மணியம் பொறுப்பில் உள்ள கார்த்திக் என்பவர் திருப்பணி வேளைகளில் கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில், அலுவலகத்தில் வைத்து மது அருந்தும் வீடியோ வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தக்கார் சர்க்கரையம்மாள் கூறும்போது, “உதவி அரச்சகர் கோமதி விநாயகம் உள்ளிட்ட 4 பேரும் கோயிலில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். கோயில் பூஜை விவகாரங்களில் தலையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அர்ச்சகர் சுந்தர் மீது கும்பாபிஷேகத்துக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.

மேலும், ஆபாசமாக ஆடிய அர்ச்சகர்களை தாக்கியதாக மேட்டு தெருவை சேர்ந்த காளிராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in