‘மா’ விவசாயிகளுக்காக கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்!

கிருஷ்ணகிரியில் ‘மா’ விவசாயிகளைக் கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரியில் ‘மா’ விவசாயிகளைக் கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: ‘மா’ விவசாயிகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டிப்பதாக, கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே ‘மா விவசாயிகளை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து’ அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இன்று ( ஜூன் 20) காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம், மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட 668 ‘மா’விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.2.75 கோடி வழங்க, அரசுக்கு அப்போதைய ஆட்சியர் கோப்புகளை தயார் செய்து அனுப்பி வைத்தார். தற்போது வரை இழப்பீடு வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

நிகழாண்டில் மழையால் ‘மா’ விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், விளைந்த மாங்காய்கள் அறுவடை செய்து விற்பனை செய்யக்கூடிய சூழ்நிலை விவசாயிகளுக்கு அமையவில்லை. அரசும், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தோட்டங்களில், மரங்களில், மாங்காய்கள் பழுத்து விழுந்து கிடக்கின்றன. ‘மா’ விவசாயிகளுக்கு மானியம் வழங்கி, கொள்முதல் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் கண்டுகொள்ளவில்லை. எனவே, ‘மா’ விவசாயிகளின் நிலையை அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான தான் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. எனவே, ‘மா’ விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.

முன்னதாக, இப்போராட்டத்துக்கு ‘மா’ விவசாயிகள், விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தும், அரசுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். உண்ணாவிரத போரட்டம் நடந்த இடத்தில், விவசாயிகள் ஒரு டன் மாங்காய்களை கொண்டு வந்து கொட்டினர். அதில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி, மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் முனிவெங்கட்டப்பன், சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம், கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் கேசவன், முன்னாள் நகராட்சி தலைவர் கேஆர்சி தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in