“தமிழகத்தில் திருப்புமுனையாகவே முருக பக்தர்கள் மாநாடு அமையும்” - காடேஸ்வரா சுப்பிரமணியம்

பழநியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேல் வழிபாடு செய்தார்
பழநியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேல் வழிபாடு செய்தார்
Updated on
1 min read

பழநி: “2026 தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுகிறவர்கள் காணாமல் போவார்கள்,” என்று பழநி முருகன் கோயிலில் வேல் வழிபாடு செய்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. அதில், அறுபடை வீடுகளில் இருந்தும் வேல் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பழநி முருகன் கோயிலில் வேல் வழிபாடு செய்து மதுரையில் நடக்க உள்ள மாநாட்டுக்கு வேலை கொண்டு செல்வதற்காக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திங்கட்கிழமை (ஜூன் 9) மாலை பழநிக்கு வந்தார்.

பழநி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயில், புலிப்பாணி ஆசிரமத்தில் வழிபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் பின்னர் கூறியது: “மதுரையில் நடக்க உள்ள முருக பக்தர்களின் ஆன்மிக மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் அழைப்பதற்காக, அவரை சந்திக்க கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அமைச்சர் சேகர்பாபு சங்கிகள் நடத்தும் மாநாடு என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்.

பழநியில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, திமுகவின் கட்சி மாநாடு போல இருந்தது. அந்த மாநாட்டுக்கு தமிழக அரசும், காவல் துறையும் அனுமதி கொடுத்தது. கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து இதுவரை யாரும் நடத்திராத வகையில் ஜூலை 7-ம் தேதி முதல் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவோம் என அமைச்சர் சேகர்பாபு அறிக்கை கொடுத்துள்ளார்.

இந்துக்கள் மத்தியில் பெரிய எழுச்சி ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, சென்னிமலையில் தொடங்கி, திருப்பரங்குன்றத்தில் மையம் கொண்டு தற்போது மதுரையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு முடிவுரை எழுதப்படுகின்றது என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டை எதிர்ப்பதால் பலம் கூடிக் கொண்டிருக்கிறது. அறுபடை வீடுகளில் இருந்து வேல் கொண்டு சென்று, மாநாட்டில் மக்கள் வழிபாடு செய்யும் வகையில் பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம்.

இந்த மாநாடு தமிழகத்தில் பெரிய திருப்புமுனையாக அமையும். சூரபத்மனை வதம் செய்ய பார்வதி முருகனுக்கு வேல் கொடுத்தது போல் நாட்டில் அக்கிரமம், அநியாயத்தை அழிப்பதற்கு இந்த வேல் பயன்படும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. குறிப்பாக, உளவுத் துறை சரியில்லை. போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்துக்களை ஒன்றுப்படுத்துவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுகிறவர்கள் காணாமல் போவார்கள்,” என்று அவர் கூறினார். தொடர்ந்து, பழநி மலைக்கோயிலுக்கு சென்ற அவர், அங்கு வேல் வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in